அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் பாபு என்ற நபர், தனியார் ஓட்டல்கள், கிளப்கள் ஆகியவற்றில் உள்ள பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படுவது தொடர்பாக அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனியார் ஓட்டல்கள், கிளப்கள் ஆகியவற்றில் உள்ள பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படுகின்றன. இதுதொடர்பாக அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய உத்தரவு பிறப்பித்து சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (செப்டம்பர் 14) தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், கலால்துறை, காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கும் பார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் அமைத்த குழுக்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் மூலம் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அமைத்துள்ள குழுக்கள் உரிய சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“