scorecardresearch

டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

HC order interim stay for closure of TASMAC bars in Tamilnadu: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மது பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் பார் உரிமையாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், தனது உத்தரவில், 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். மதுவிலக்கு சட்டப்படி மதுபான கடைகளோடு தின்பண்ட கடைகள் மற்றும் பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை குழு; ஸ்டாலின் உத்தரவு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வழக்கிற்கு அப்பாற்பட்டு இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதாகவும், மனுதார்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை என்று தெரிவித்தார். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், டாஸ்மாக் நிறுவனம் பார்களை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டர் கோரலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hc order interim stay for closure of tasmac bars in tamilnadu