பழனி கோவில் கிரிவலப் பாதையில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி ஏதாவது, வணிக நிறுவனங்கள் எதுவாக இருப்பினும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பழனி முருகன் கோயில் உலக பிரசித்திபெற்ற கோயில், இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனு திங்கள்கிழமை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனி முருகன் கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிவலப் பாதையில் இருந்த 86 கடைகள் தற்போது வரை அகற்றப்பட்டுள்ளது. ஒரு மினி பேருந்து, 3 பேட்டரி வாகனங்கள் பக்தர்களின் வசதிக்காக செயல்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் வசதிக்காக 3 கழிவறைகள் உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றுவது குறித்து 58 வணிக மற்றும் 81 குடியிருப்புகள் வாடகை கட்டுபவர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலின் கிரிவல பாதையில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது. வணிக நிறுவனங்கள் ஏதுவாக இருப்பினும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்க்கிங் வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும். பக்தர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை கட்டணமின்றி இயக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காத பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. நேரில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“