பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மகளிருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து 2 மாதங்களில் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள 21 பல்கலை கழகங்களில் துணை வேந்தர், சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் நியமனங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு, உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை எனவும், ஆட்சிமன்ற குழு, சிண்டிகேட், செனட் அமைப்புகளுக்கும், விருப்பப்படி இந்த நியமனங்கள் நடப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப, ஐந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரும்; ஏழு மகளிரும் துணைவேந்தர் பதவிகளில் நியமனம் செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பல்கலைக்கழக பதவிகளில் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து 2 மாதங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பல்கலைக்கழக பதவிகளுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு சட்டங்கள் பின்பற்றப்படுவதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையை கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.