மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என தி.மு.க எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீ கேர் (Vee Care) மருத்துவமனை உள்ளது. இந்த நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அந்த நிலத்தை காலி செய்யும்படி 2011-ம் ஆண்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
தமிழக அரசு வழங்கிய இந்த நோட்டீஸை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், “கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்குவதற்கான நிலம் ஆகும். அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்.பி.யாக இருக்கிறார். அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சர். எனவே, மனுதாரர், நிலமற்ற ஏழை இல்லை” எனக் கூறி கலாநிதி வீராசமியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
மேலும், “தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒரு மாதத்தில், மனுதாரர் அந்த நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு காலி செய்து கொடுக்க தவறும்பட்சத்தில், நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“