அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற புதன்கிழமை உத்தரவிட்டது.
அண்மையில், அ.தி.மு.க-வுக்கு தாவிய முன்னாள் பா.ஜ.க ஐ.டி. விங் மாநில செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, சி.டி.ஆர். நிர்மல்குமார் தொடர்ந்து தன்னைப் பற்றி ஆதாரமில்லாமல் அவதூறு பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சி.டி.ஆர். நிர்மல் குமார் அவதூறாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார். இதற்கு சி.டி.ஆர். நிர்மல் குமார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்துப் பேசுவதற்கு தடை விதிக்க கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், தன்னிப் பற்றி முன்னாள் பா.ஜ.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் அவதூறு பேசுவதற்கு தடை விதிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
அதில், சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளைப் பேச தடை விதித்து சென்னை உயர் ந்நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"