பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வரும் அக்டோபர் 30-ம் தேதி 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.
Advertisment
ஆண்டுதோறும் விழாவின் போது அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் தேவர் சிலைக்கு அணிவிப்பது வழக்கம். இந்நிலையில் அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். பிரச்சனையை இருவரும் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இருதரப்பினரும் கோரினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக வழக்க தொடரப்பபட்டது. அ.தி.மு.க மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோர் பெயரில் வங்கி லாக்கரில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பதற்காக மதுரை வங்கியிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்கக் கவசத்தை மாவட்ட வருவாய்த் துறையினர் பசும்பொன் கிராமத்திற்கு நேற்று கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“