மனைவிக்கு அச்சுறுத்தலாகவும் அவரிடம் தொடர்ந்து வன்முறையாகவும் நடந்து கொண்ட கணவரை இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவர் தன்னை தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும், வன்முறையாக நடந்துகொள்வதாகவும், இதனால் அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இவர்களது விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். என் மஞ்சுளா கூறுகையில் “ பெண்ணின் கணவர் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு முன், மனைவியிடம் வன்முறையாக நடந்துகொள்கிறார். இது அவரின் மன நிம்மதியை சிதைக்கிறது. ஒரு பெண், வீட்டிலேயே இருந்து வேலைகள் செய்யாமல் தான் தனியாக வாழ வேண்டும் என்று நினைத்தால், இதுபோன்ற வன்முறைகளை சந்திக்க வேண்டிய நிலை இந்த சமூகத்தில் உள்ளது.
இந்நிலையில் இது தொடர்ந்தால் அது குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்பதால் , இரண்டு வாரங்களில் கணவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அப்படி வெளியேறா விட்டால் , காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்படுவார் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வாதிடப்பட்டபோது, மனைவியை தொல்லை செய்யாமல், ஒரே வீட்டில் கணவர் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கணவரின் வன்முறை அதிகரித்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.