அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு

தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி கோரி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்தால் இந்நிலையை தவிர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

அதனால், தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பிரச்னையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்து காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

×Close
×Close