திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள ஈஜிபுரா கிராமத்திலுள்ள, கோதண்டராமர் கோவிலில் நிறுவ 64 அடி உயரம், 24 அடி அகலத்தில், 350 டன் எடையில் ஒரே கல்லால் ஆன, விஸ்வரூப கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து சாலை மார்க்கமாக இந்த சிலையைக் கொண்டுப் போக, தற்போது மார்கண்டேய ஆற்றில் மண் சாலை அமைத்து லாரியை கொண்டு செல்லும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பெருமாள் சிலையை எடுத்து செல்ல தடைவிதிக்கக் கோரி திண்டிவனம் ரோசனை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பூபால் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். சிலை எடுத்துச் செல்வதால் அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர், கனிம வளத்துறை செயலாளருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்தார். மேலும், வெள்ளிமேடுபேட்டை குபேரன், சேத்துபட்டு நாகராஜன், கப்ளம்பாடி சாந்தி ஆகியோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் அவரது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு, “மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதால், பாதிக்கப்பட்ட மூவருக்காக தொடரப்பட்ட வழக்கை பொது நல வழக்காக கருத முடியாது” எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.