ரூ.11.48 கோடி பறிமுதல் சர்ச்சை…திமுக எம்பி கதிர் ஆனந்திடம் வரி வசூலிக்க தடை

கதிர் ஆனந்த் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்த பின்பும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பதாக வாதிடப்பட்டது

மக்களவை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட 11.48 கோடி ரூபாய் தொடர்பாக தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்தில் வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

மேலும், அவருடன் தொடர்புடையவர்கள் எனத் தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயைக் கைப்பற்றிய நிலையில், அந்தப் பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

ஆனால், அந்தப் பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை தரப்பில், கதிர் ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு கதிர் ஆனந்த் விளக்கம் அளித்தார். அதன்பின் அந்தப்பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன் அதற்கான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கதிர் ஆனந்த் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்த பின்பும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பதாக வாதிடப்பட்டது

வழக்கை விசாரித்த நீதிபதி, வரி வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hc restrained it department from initiating recovery proceedings against dmk mp kathir anand

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com