போக்குவரத்து துறை ஆட்சேர்ப்பு முறைகேடு புகார் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இருவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த மோசடி மூலமாக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஏப்ரல் மாதம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
இந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. எஃப்ஐஆர் பதிவுகளில் அவர் பெயர் முதலில் இடம்பெற வில்லை. இருப்பினும் அப்போதே சம்மன் வரத் தொடங்கின. துணை குற்றப்பத்திரிகையில் தான் மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜூலை 29, 2021 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது, செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையினரிடம் இல்லை. இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி உயர்நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்யவும், குறிப்புகளை எடுக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர், உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், இடைகாலத் தடை விதிக்கப்பட்டது. சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக உறுதியான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தது. மேலும் அந்த பிரிவின் கீழ் சம்மன் அனுப்ப முடியாது எனக் கூறியது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”