அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு நவம்பர் 13-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்குட்பட்ட வரதராஜபுரம் கிராமம் அமைப்துள்ள பகுதியில் அடையாறு ஓடும் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக்கோரி, அந்த கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார்.
இதன் பின்னர், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியிட்ட அரசாணைப்படி, வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் அடையாறு ஆற்றை தூர்வாரி, கரைகளை தரமாக பலப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் பழனியப்பன் மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையில், கடந்த வாரம் பெய்த கனமழையில் வரதராஜபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இந்நிலையில், பழனியப்பன் எழுதிய கடிதத்தை தானாக முன்வந்து பொதுநல வழக்காக நவமபர் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏன் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கிறீகள் என நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினார்.
அப்போது, பருவமழையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அடையாறு ஆற்றில் 182 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், இதுதொடர்பாக, 17 வழக்குகள் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு ஆதில் 9 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறோம் என, அரசு வழக்கறிஞர் ராஜகோபாலன் தெரிவித்தார்.
அதனையேற்ற நீதிபதிகள், எத்தனை ஆக்கிரமிப்புகள் உள்ளது, அதை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13 ஆம் தேதி தள்ளிவைத்தார். மேலும் இந்த வழக்கில், மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர், தலைமை செயலாளர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.