கோயில்களுக்கு இனி யானைகள் வாங்கக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் அறிவுறுத்த இந்து சமய அறநிலையத் துறை செயலருக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் 2000-ம் ஆண்டில் லலிதா என்கிற பெண் யானையை வாங்கி வளர்த்து வந்தார். அந்த யானைக்கு தான்தான் உரிமையாளர் என சான்றிதழ் கேட்டு தலைமை வன பாதுகாவலருக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் 2020-ல் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஷேக்முகமது உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானைக்கு உரிமை சான்றிதழ் கேட்டு ஷேக்முகமது அனுப்பிய விண்ணப்பித்தை நிராகரித்தது சரியானது தான். அதே நேரத்தில் லலிதா யானையை அவர் வளர்க்கலாம், அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் யானையை ஆய்வு செய்யலாம் என 10.9.2020-ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், 9.12.2022-ல் வாகனத்தில் ஏற்றும்போது லலிதா யானை தவறி விழுந்து காயமடைந்தது. ஜனவரி 1 மற்றும் பிப்ரவரி 2ம் தேதியும் லலிதா தவறி விழுந்து காயமடைந்தது. இதையடுத்து விருதுநகர் முத்துமாரியம்மன் கோயிலில் லலிதா தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விருதுநகருக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் யானை லலிதாவை நேரில் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவில், லலிதாவுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் கலைவாணனை நியமிக்க வேண்டும். முழுமையாக குணமடைந்ததும் லலிதாவை யானைகள் மறுவாழ்வு முகாமில் சேர்க்க வேண்டும். லலிதாவுக்கு 60 வயதாகிறது. இதனால் லலிதா ஓய்வு பெற்றதாக கருதி எந்த பணியும் வழங்காமல் உணவு வழங்கி பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து கோயில்கள், தனிநபர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். கோயில்கள் மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளை அரசு மறுவாழ்வு மையங்களுக்கு மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.
மேலும், கோயில்கள், தனிநபர்கள், வளர்ப்பதற்காக யானைகள் வாங்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோயில்களுக்கு இனிமேல் யானைகள் வாங்கக்கூடாது என அனைத்து கோயில்களுக்கும் அறிவுறுத்த இந்துசமய அறநிலையத்துறை செயலருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜுன் 19) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“