தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், நாளொன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலவழிக்க கூடாது என தேர்தல் ஆணையம் புதிய கட்டுபாட்டை விதித்துள்ளது. நாளொன்றுக்கு போஸ்டர், தோரணம், பிரச்சார நோட்டீஸ் செலவே 10 ஆயிரம் தாண்டிவிடும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அரசியல் கட்சியினரிடையே புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்ய தேர்தல் ஆணையம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இதன்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கு 50 முதல் 70 லட்ச ரூபாய் வரையிலும், சட்டமன்றத் தேர்தலுக்கு 20 முதல் 28 லட்ச ரூபாய் வரையிலும் செலவழித்துக் கொள்ளலாம். இந்த உச்சவரம்பு மாநிலத்தின் மக்கள் தொகை, தொகுதியிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கொண்டு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை நிழல் கண்காணிப்பாளர்களைக் கொண்டு தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். தேர்தல் முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது செலவுக் கணக்கை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். செலவுக் கணக்கை சமர்பிக்காதவர்கள், அடுத்த 3 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமுண்டு.
நாளொன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணமாக செலவழித்துக் கொள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது. மேற்கொண்டு ஆகும் செலவுகளை, வங்கி காசோலை மூலமாகவோ, டி.டி. மூலமாகவோ அளிக்கலாம். இந்த உச்சவரம்பு தற்போது நாளொன்றிற்கு 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டுப்பாடு அரசியல் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் கூறுகையில், "பிரச்சார போஸ்டர் அடிக்கவே 4000 ஆயிரம் ஆகிவிடுகிறது. இதுபோக, மைக் செட், கொடி தோரணம், பிரச்சார பிட் நோட்டீஸ், வண்டிக்கு டீசல் செலவுகள் இருக்கின்றன. இவ்வளவையும் 10 ஆயிரம் ரூபாய்க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? பிரச்சாரம் செல்லும் இடங்களில், தொண்டர்களுக்கு டீ, வடை வாங்கிக் கொடுக்கவே இத்தொகை பத்தாதே.
இன்னும் சொல்லப் போனால், தமிழக இடைத்தேர்தல் களம் போகிற போக்கில் ஒரு வாக்காளருக்கே இந்தத் தொகை பத்தாது. தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அமல்படுத்தும் சீர்திருத்தத்திற்கும், கள நிலவரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது!" என்றார்.
வேட்பாளருக்கு எடுக்கப்படும் ஆரத்தி முதற்கொண்டு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வரை, வேட்பாளரோடு வரும் கட்சி நிர்வாகிகள் தான் பெரும்பாலும் பணத்தை வாரி இறைக்கின்றனர். அவர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் என்ன வழிமுறை வைத்திருக்கிறது? வேட்பாளர்களுக்கு தான் தேர்தல் ஆணையம் உச்சவரம்பு விதித்திருக்கிறதே ஒழிய, அவர்கள் சார்ந்த கட்சி செலவழிக்கும் தொகைக்கு உச்சவரம்பு இல்லை.
சமீப காலங்களில், தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பித்த வேட்பாளர்கள் பலரும் தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையை காட்டிலும் குறைவாகவே கணக்கு காட்டியுள்ளனர். கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் எந்த அளவிற்கு விளையாடியது என நாடே வேடிக்கை பார்த்தது. ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அ.தி.மு.க, இடைத்தேர்தலில் மொத்தம் 20.05 லட்ச ரூபாய் மட்டுமே வேட்பாளர் சார்பில் செலவழித்ததாக கணக்கு காட்டியது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், 21.07 செலவழித்தாக தெரிவித்தார். 20 ரூபாய் டோக்கன் விநியோகித்து ஆர்.கே.நகரை கைப்பற்றியதாக இன்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் டி.டி.வி.தினகரன், வெறும் 16.48 லட்சம் மட்டுமே செலவழித்ததாக கணக்கு சமர்ப்பித்தார். இவர்கள் மூவருமே தேர்தல் ஆணையம் அனுமதித்த 28 லட்ச ரூபாய் உச்சவரம்பைக் காட்டிலும் குறைவாகவே செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளனர்.
தென்மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சராசரியாக ஒரு வேட்பாளருக்கு 5 கோடி ரூபாய் வேண்டும். இதுவே நகர்புற தொகுதியாக இருந்தால் 12 கோடி தேவைப்படும். இடைத்தேர்தலில் 18 முதல் 20 கோடி இருந்தால் தான் கட்சி மானத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். தேர்தலில் செலவே ஓட்டுக்கு பணம் தானே. அந்த கட்சிக்காரர்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக, இந்த கட்சிக்காரர்கள் தருகிறார்கள். மக்கள் எல்லோரிடமும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்துவிடுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு தேர்தலுக்கான பட்ஜெட் எகிறிக் கொண்டே செல்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் என்ன வழிமுறை வைத்திருக்கிறது?" என்றார்.
ஒரு சாமானியன் தேர்தலில் போட்டியிட்டு, மக்களுக்கு தொண்டாற்றிட வருவார் என்பதெல்லாம் கனவிலும் நடக்காத கதையாகிவிட்டது. தேர்தலில் பணநாயகம் விளையாடுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் புதிது புதிதாக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத எந்த விதிமுறையும் களத்தில் மீறப்பட்டே தான் தீரும்.