திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் உத்தரவிட்டதால், மாணவிகள் வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய அரசு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குகிறது. கடந்த மாதம் வரை கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வகுப்பு தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் இருந்த 2 மாணவிகளை அழைத்த தலைமை ஆசிரியர், கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதனை செய்யாவிட்டால் படிப்பை தொடர முடியாது என மிரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், மாணவிகள் வெறும் கையால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சென்று கூறியுள்ளனர். இதையடுத்து, பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டுள்ளனர். அவர்களையும் தலைமை ஆசிரியர் திட்டி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி கழிப்பறையை அழுதுகொண்டே சுத்தம் செய்யும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, புகாரின்பேரில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில் அப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இத்தகைய சம்பவங்கள் பலமுறை இப்பள்ளியில் நடைபெற்று வருவதாகவும், அதனை பயத்தின் காரணமாக வெளியே சொல்ல மாணவிகள் தயக்கம் காட்டியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.