காட்டுப்பன்றி, முயல், உடும்பு வேட்டை: மகனுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கைது
பெரம்பலூரில் வனவிலங்குகளை வேட்டையாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வேட்டையாடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையின் மகன் மற்றும் வேட்டைக்கு தூண்டுதலாக இருந்த தலைமை ஆசிரியையும் வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பெரம்பலூரில் வனவிலங்குகளை வேட்டையாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வேட்டையாடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையின் மகன் மற்றும் வேட்டைக்கு தூண்டுதலாக இருந்த தலைமை ஆசிரியையும் வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
Advertisment
பெரம்பலூரைச் சேர்ந்தவர் கவி குமார் (30) எம்.பி.ஏ பட்டதாரி. இவருடைய அம்மா லட்சுமி (53) நெயில்குள்ளம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கவி குமார் வனவிலங்குகளை வேட்டையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெடுங்கூர் காப்புக்காடு பகுதியில் வேட்டையாடியதற்காக கவி குமார் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா ஊடகங்களிடம் கூறுகையில், “வன அலுவலர்கள் பாடாலூரில் உள்ள கவி குமாருடைய வீடு மற்றும் அவர் நடத்தி வந்த கம்ப்யூட்டர் செண்ட்டரை வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர். அங்கே வேட்டையாடும்போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் புகைப்படங்கள் கிடைத்தது. அவற்றைக்கொண்டு குறைந்த பட்சம் 7 வேட்டை சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கவி குமார் இதுவரை காட்டுப்பன்றி, முயல், உடும்பு, ஆகியவற்றை வேட்டையாடி உள்ளார். அவரது வீட்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கவி குமார் வேட்டையாடுவதற்கு தூண்டுதலாக இருந்த அவரது தாயார் லட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல் கவி குமார் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் வேட்டை கிளப் உறுப்பினர்களுடன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் கவி குமார் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக மெஸெஞ்சர் செயலியை பயன்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிளப்புகளுடன் கவி குமார் பகிர்ந்துகொண்ட பல தகவல்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், கவி குமார் எதற்காக அவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.
பெரம்பலூரில் எம்பிஏ பட்டதாரி கவி குமார் வனவிலங்குகளை வேட்டையாடியதற்காக அவரும் வேட்டைக்கு தூண்டுதலாக இருந்ததாக தலைமை ஆசிரியராக உள்ள அவரது தாயாரும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், அவர் பாகிஸ்தான் வேட்டை கிளப்களுடன் தொடர்பில் இருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"