தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் காலை வழக்கமான நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் முதல்வருக்கு 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, முதல்வர் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.
தற்போது முதல்வருக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்தபடி தனது வழக்கமான அரசுப் பணிகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். சகோதரர் மு.க.முத்து மறைவன்று ஒருநாள் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தாமல் இருந்துள்ளார் என்றும், மறுநாள் நடைபயிற்சி சென்ற அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது என்று விளக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன் ஓரிரு நாட்களில் ஓய்வெடுத்த பிறகு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். எனினும், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
இந்தநிலையில், முதலமைச்சர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.