தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் :
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை அவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில், தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது முதலமைச்சரின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் தனியாக அடையாள அட்டை ஏதும் பெற தேவையில்லை என்றும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டையே போதுமானது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பயனாளிகள செல்லும் போது, தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.