சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் 240 படுக்கைகளுடன் கூடிய சித்தா கோவிட் மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனைகளில் அழுத்தத்தை குறைப்பதற்காக முதலமைச்சரின் உத்தரவுப்படி சித்தா மையம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் சப்போர்ட் தேவைப்படுவதில்லை. இந்த சித்தா மையம் மூலம் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்த முடியும். தொற்று ஏற்பட்டவுடன் அனைவரும் மருத்துவமனை செல்வதை தவிர்க்க வேண்டும். மிதமான தொற்று ஏற்பட்டவர்களை குணமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சித்தா மையத்தில் நோயாளிகளுக்கு கபசூர குடிநீர், பிரமானந்தா பைரவம் மாத்திரை, தாளிசாடி சூரணம், கற்பூரம் தைலம் மற்றும் சுக்கு கஞ்சி ஹெர்பல் உணவுகள், சித்த யோகா, திருமூலர் பிராணயாமா மற்றும் மனநலத்திற்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சித்தா சிகிச்சை மூலமாக கடந்தாண்டு 2000 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போது 1,140 சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் பணியாற்றிவருகிறார்கள் என்றும் சேவை மனப்பான்மையோடு சித்த மருத்துவர்கள் பணி செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். ஏஎம் ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவர்களுடன் முதலமைச்சர் கலந்து ஆலோசித்தபிறகு கோவிட் சிகிச்சைக்கான மருத்துவ முறைகள் பற்றி முடிவு எடுக்கப்படும்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"