கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து வாலாங்குளம் வழியாக சுற்றி வந்து மீண்டும் பந்தய சாலை பகுதியை சுற்றி வந்து 8 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடை பயிற்சி மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், "தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் ஸ்டாலின் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
Advertisment
38 வருவாய் மாவட்டத்தில் 8 கிலோமீட்டர் நடை பாதை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஜப்பான், டோக்கியோ சென்ற போது 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் தினந்தோறும் 10,000 நடைபாதைகள் நடந்தால் உடல் சீராக இருக்கும். மக்கள் நடப்பதற்கு பயிற்சி நடைபாதை அமைக்கப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், ஆணையாளர்கள் நடைபாதை தேர்வு செய்யும் பணி மேற்கொள்வர். முதல்வர் 38 மாவட்டங்களில் பணிகளை துவங்கி வைக்கிறார்.
செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவையில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடமாக கோவை பந்தய சாலை இடம் உள்ளது.
வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கோவை அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“