தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடப்பதற்கான பிரத்யேக சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் இன்று(அக்.22) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மா.சுப்பிரமணியன், நாங்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றிருந்த போது 8 கி.மீ தூரத்திற்கு ஹெல்த் வாக் என்று சாலை அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது மக்களிடையே நடைபயிற்சி, ஜாக்கிங் பழக்கத்தை உருவாக்க இந்த சாலை அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள்.
ஏன் குறிப்பிட்டபடி 8 கி.மீ என்று வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு 8 கி.மீ என்பது நடக்கும்பொழுது 10,000 அடிகள் (ஸ்டெப்ஸ்) வரும். 10,000 ஸ்டெப்ஸ் என்பது தினந்தோறும் ஒரு மனிதர் நடக்க கூடிய சுகாதார விதி. தினமும் ஒருவர் 10,000 ஸ்டெப்ஸ் நடைபயிற்சி செய்கிறார்கள் என்றால் அவர்கள் உடலுக்கு நல்லது. இதயத்திற்கு நல்லது. இந்த நல்ல திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 38 மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் நடைபயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக 8 கி.மீ சாலை தேர்ந்தெடுத்துள்ளோம். சாலையில் இரு மார்கங்களிலும் மரம் நடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது 8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். இது மருத்துவத் துறையில் மற்றொரு மகத்தான திட்டம். காலை 6 மணிக்கு திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் நடைபயிற்சி செய்கிறார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“