Advertisment

தமிழகத்தில் சூடுபிடிக்கும் பிரச்சார களம் : தலைவர்களின் கருத்து ஒற்றுமை என்ன?

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர்கள் பிரச்சாரத்தில் ஒருமித்த கருத்துகள் குறித்து அலசல்

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் சூடுபிடிக்கும் பிரச்சார களம் : தலைவர்களின் கருத்து ஒற்றுமை என்ன?

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்லுக்கான பிரச்சாரம் கடந்த மாத பிற்பாதியில் தொடங்கியது. இதில் அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க சார்பில் அக்கட்சியில் தலைவர் மு.க. ஸ்டாலின், மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதில் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பல கிராமங்களில் தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராமசபை கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் :

சட்டமன்ற தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தொடங்கிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த டிசம்பர் 19-ந் தேதி தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் பொதுதேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதாலும், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வரமுடியாது என்பதாலும் முதல் பிரச்சாரத்தை இங்கு தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களின் சிறப்பான ஆட்சியால் தமிழகத்தில் அ.தி.மு.க 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளது. இதில் ஜெயலலிதா இறந்தவுடன் இந்த ஆட்சி ஒருமாதம் நீடிக்குமா  என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த பேச்சுக்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க அம்மா ஆட்சி நான்கரை ஆண்டுகளை கடந்துள்ளது.

தொடர்ந்து தி.மு.க.வின் கிராசபை கூட்டம் குறித்து பேசிய அவர், கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர தி.மு.க துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருங்கள். நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மக்கள் அளிப்பார்கள்.  அ.தி.மு.க.வை உடைத்து இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அ.தி.மு.க அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை செய்து வருகிறார்.  இந்த ஆட்சி மக்களாட்சி, இதை மக்கள்தான் ஆள்கின்றனர். தி.மு.க.வின் வாரிசு அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விவசாயிகள் குறித்து பேசி வரும் முதல்வர் ”விவசாயி என்றால் உழைப்பாளி, விவசாயி என்பவர் யாரையும் எதிர்பாராமல் சொந்தகாலில் நிற்பவர்”. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழக விவசாயிகளை அரசு குழந்தை போல பாதுகாத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் இழப்பீடு அதிகம் வழங்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நேற்று கோவில்பட்டியில், பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கினோம். பல்வேறு நாடுகளில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையை எட்டி உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தியாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு இன்றி தொழில் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு ஸ்டாலின் புதிய பெயர் வைப்பது குறித்து பேசியுள்ள முதல்வர், ஸ்டாலின் இப்படி பெயர்வைப்பத நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தங்களுக்கு 200 சீட் கிடைக்கும் என்று சொல்கிறார். மக்கள் தான் ஒட்டு போட வேண்டும். நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்த ஆட்சி இருப்பதே மக்களுக்காகத்தான். இங்கு மக்கள் தான் முதல்-அமைச்சர், மக்கள் என்ன ஆணையிடுகிறார்களோ அதை நிறைவேற்றுவது தான் முதல்-அமைச்சரின் பணி.

ஆனால் தி.மு.க.வில் அப்படியல்ல, முதலில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் அடுத்து உதயநிதி. குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி. தனது குடும்பத்தினர் தான் முதல்-அமைச்சராக வர வேண்டும், வேறு யாரும் வரக்கூடாது. தமிழகத்தை ஒரு வாரிசு அரசியலாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் :

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில், கடந்த நவம்பர் 01-ந் தேதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 20-ந் தேதி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பிறந்த இடமான திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  இந்த பிரச்சாரத்தில், அதிமுகவை நிராகரிக்கிறோம்.

அதிமுக ஆட்சியின் தோல்விகளை நிகராகரிக்கும் தீர்மானங்ளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும 16000 கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை மீட்போம், அதிமுகவை நிராகரிப்போம் என்ற பல பெயர்களில் ஸ்டாலின் தனது தீவிர பிரச்சாரத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தி வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதராவாக குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், அந்த போராட்டத்திற்கு ஆதராவாக சென்னையில், டிசம்பர் 18-ச் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் கொண்வரப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்து வருகிறார். மேலும் அதிமுக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வரும் இவர் மக்கள் அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவுகட்ட தயாராகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.  இதற்கு முன் தி.மு.க 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அந்த 5 முறையும் திமுக தலைமையிலான ஆட்சி பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தியுள்ளது. மேலும் விவசரிகளுக்கு பொதுமான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.

தற்போது அதிமுக சார்பில் பல கிரமங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய ஸ்டாலின், ஏற்கனவே கிராமங்களில் ஆராம்பசுகாதார நிலையம் உள்ளது. ஆனால் தற்போது மினி கிளினிக் என்ற பெயரில் புதிய மருத்துவமனை தொடங்கியுள்ளார்கள். இதற்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமித்துவிட்டார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனவும், முதியோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசியல் கட்சினருக்கு மட்டுமல்லாது தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறார். பிரச்சாரத்தை தொடங்கியதில் இருந்து அதிமுகவையும் அதன் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ஸ்டாலின் அவர்களுக்கு புதிதாக பெயர்சூட்டுவதை தனது வழக்கமாக வைத்துள்ளார். “பணத்தை காட்டினால் மட்டும் தான் ‘ஓ! யெஸ்’ என்பவராக அமைச்சர் ஓ.எஸ். மணியன் இருக்கிறார்; பெருந்தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு ஊழல் செய்யும் அமைச்சர் காமராஜ், தன்னுடைய பெயரை ‘கமிஷன்ராஜ்’ என்று மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது குடும்ப அரசியல் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், குடும்பம் குடும்பமாகப் பாடுபட்டோம்! குடும்பம் குடும்பமாகப் போராடினோம்! குடும்பம் குடும்பமாகச் சிறைப்பட்டோம்! குடும்பம் குடும்பமாகச் சித்திரவதைப் பட்டோம்! அதனால் தி.மு.க. என்பது குடும்பக் கட்சி தான்! பல்வேறு குடும்பங்களின் கட்சிதான் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் :

கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று 3-வது பிரதான கட்சியாக உருவெடுத்தார். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தினத்து போட்டியிடும் என அறிவித்துள்ள கமல்ஹாசன் அதற்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த டிசம்பர் 13-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தமிழகத்தை சீரமைப்போம் என்ற கருத்தை மையமாக கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை  தொடங்கிய கமல்ஹாசன், ஆளும் அதிமுக எதிர்கட்சியாக திமுக இரண்டையும் கடுமையாக விமாசித்து வருகிறார். மேலும் இளைஞர்களை அரசியலை கையிலெடுத்து புதிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறியள்ள கமல்ஹாசன்,உணவு குடிநீர் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளை அரசு ஓடிச்சென்று தீர்க்கவேண்டும். மக்கள் நீதி மய்யம் செய்யும். மேலும் மக்கள் நீதி மய்யம் ஆட்சியில், விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவார்கள். முக்கியமாக பெண் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  மக்களுக்கு அத்தயாவசிய தேவைகளை வழங்கவும், கல்வியை எளிமையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பெரும் சர்ச்சை சந்தித்து வரும் நீட் தேர்வு குறித்து கல்வியாளர்களுடன் முடிவெடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசி வரும் அவர் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஒருவாக்க மக்கள் தயாராகி விட்டனர். இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே என தெரிவித்துள்ளார். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டம் என கூறுகிறார்கள். மாற்றத்தை பார்க்க வந்து இருக்கிறீர்கள்.

தமிழகத்தின் அவலங்களை மாற்ற வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை வைத்திருக்கிறேன். பொதுமக்கள் நிச்சயம் நீங்கள் தான் வருவீர்கள் என கூறுகிறார்கள். இதனால் எனக்கு நம்பிக்கை வருகிறது. நாளை நமதே ஆகட்டும். நாளை நிச்சயம் நமதே என கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி – மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் மூவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் பதவியை பிடிக்கவும், தனித்து போட்டியிடும் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் மூவரும் பொதுவாக தங்களது பிரச்சாரத்தில் விவசாயிகள் நலன், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, மற்றும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக பிரச்சாரம் செய்து வருகிறன்றனர்.

ஆனால் பிரச்சாரத்தில் ஈடுபடும் மூவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தற்போதைய ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவர்கள் கூறும் குறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது பிரச்சார கூட்டத்தில் பதிலளித்து வருகிறார். இவர்கள் மூவரின் பரபரப்பாக அரசியல் கருத்துக்காளால் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்றும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், போக போக பிரச்சார களத்தில் கருத்து மோதல்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Edappadi K Palaniswami Kamalhaasan M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment