அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்த முகமது ஜான், காலமானதையடுத்து தமிழத்தின் சார்பில் இருந்து ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியானது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.க்களாக இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இருவரும் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்தால், ஒரே நேரத்தில் ஒருவர் 2 பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் தங்களுடைய ராஜினாமா பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், தமிழகத்தில் இருந்து 3 ராஜ்ய சபா உறுபினர்கள் பதவி காலியாகி உள்ளது. இந்த 3 ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தினால், 3 பதவிகளையும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுகவே கைப்பற்றும் என்கின்றனர். அதோடு, ஆட்சி மாறியதால் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவியும் காலியாகி உள்ளது.
அதனால், திமுகவில் இந்த 3 ராஜ்ய சபா எம்.பி.க்கள் பதவி மற்றும் டெல்லி பிரதிநிதி பதவி யாருக்கு அளிக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தேர்தலில் தோல்வியடைந்த தலைவர்கள் பெயரும் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரும் பேசப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் பங்களிப்பை பலரும் கூறுகின்றனர். ஆனால், சபரீசன் இதுவரை எந்த பதவியையும் கேட்டதில்லை. அதனால், சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி அல்லது தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவி அளிக்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதே போல, கொங்கு மண்டலத்தில் வலுவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாபதியை ராஜ்ய சபா எம்.பி.யாக்குவதன் மூலம், கோவை மாவட்டத்தில் ஒரு திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில் அரசியல் செய்வதற்கு சரியாக இருக்கும் என்று திமுக தலைமை கருதுவதாக மற்றொரு திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல, அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரனின் அமமுகவுடன் சென்று அங்கே கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி அளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் டெல்டா மாவட்டத்தில் இருந்து யாரையேனும் ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதனால், டெல்டா மாவட்டங்களில் இருந்து ஒருவர் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்கின்றனர்.
அதே போல, இதற்கு முன்பு திமுக ஆதரவு மூத்த பத்திரிகையாளர் ஒருவர், திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு வழக்கறிஞர் பிரிவுக்கு ஒரு சீட் ஒதுக்குவது போல, ஏன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சீட் ஒதுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி அவர் வாய்ப்பு கேட்டிருந்தார். இந்த முறை அவரும் வாய்ப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபரீசன் ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி அனுப்பினால், ஏற்கெனவே டெல்லி விவகாரங்களை கவனித்து வரும் கனிமொழியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அப்படி மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இருவரும் அப்படியான போக்கை மேற்கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள் நெருங்கிய திமுக வட்டாரங்கள்.
இப்படி 3 ராஜ்ய சபா எம்.பி ஒரு டெல்லி பிரதிநிதி பொறுப்புக்கு திமுகவில் பல தலைகள் முட்டி மோதுகின்றன. இந்த போட்டிகள் எல்லாவற்றுக்கும் உரிய நேரத்தில் ஸ்டாலின்தான் யார் என்று அறிவித்து தீர்வு காண்பார். அதுவரை எல்லாமே யூகங்கள்தான் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.