தமிழ்நாட்டில் 3 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் வருகிற ஜூலை மாதம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தில் ஆளும் திமுகவில் இந்த 3 எம்.பி பதவிகளுக்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. முகமது ஜான் காலமானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து முதலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவி காலியானது. இதையடுத்து, அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேலும் 2 ராஜ்ய சபா எம்.பி. பதவிகள் காலியானது. இதன் மூலம், தமிழ்நாடு சார்பில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கு இடைக்காலத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளதால், இந்த 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகளும் திமுகவே பெறும் நிலையில் உள்ளது. இதனால், திமுகவில் இந்த 3 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த முக்கிய தலைவர்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சுமார் 300 பேர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் திமுக தலைமைக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ராஜ்ய சபா எம்.பி இடைத்தேர்தல்களில் போட்டியிட திமுகவில் அதிக உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, கடைசி நிமிடம் வரை அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுகிறார்கல் என்பதைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்த திமுக தலைமை ராஜ்ய சபா எம்.பி. தேர்தலிலும் அதே போன்ற வழியையே பின்பற்றுகிறது. ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு முன்னர் பல்வேறு சமூகங்கள், மாவட்டங்கள், தலைவர்களின் அனுபவம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திமுக தலைமை பரிசீலிக்கும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து 3 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளில் மார்ச் மாதத்தில் ஒரு பதவியும் மே மாதத்தில் 2 பதவியும் காலி என அறிவிக்கப்பட்டது. அதனால், 3 ராஜ்ய சபா எம்.பி. பதவி காலியிடங்களுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த ராஜ்ய சபா எம்.பி முகமது ஜானின் பதவிக்காலம் ஜூலை 2025ல் முடிவடைகிறது. வைதிலிங்கத்தின் பதவி காலம் ஜூன், 2022ம் ஆண்டிலும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் ஏப்ரல் 2026லும் முடிவடைகிறது. அதனால், இந்த பதவிகளுக்கு தனி தனியாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 3 ராஜ்ய சபா எம்.பி. இடங்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் சபாநாயகர் ஆர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆஸ்டின் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் போட்டியிடுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மட்டுமில்லாமல், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் அங்கே உள்ள திமுக தலைவர்கள் அரசியல் செய்வதற்கு ஏதேனும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவி தேவை என்ற கோரிக்கை உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய கார்த்திக்கேய சிவசேனாபதிக்கும், அதிமுக முன்னால் முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய தங்கம் தமிழ்ச்செல்வனுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்காத பலரும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கடும் போட்டி போடுவதாகவும் தெரிகிறது. திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்கும் சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள், ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதை பயன்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு ராஜ்ய சபாவிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வியும் எழுப்பி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜ்ய சபா இடைத் தேர்தல் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயரும். அதே நேரத்தில், அதிமுகவின் பலம் 6ஆக குறையும். தற்போது ராஜ்ய சபாவில் அதிமுக சார்பில் எம்.பி.க்களக உள்ள எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிவடைய உள்ளதால் மேலும் 4 இடங்கள் கிடைக்கும் என்பதால் திமுக தரப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
திமுக சார்பில் தற்போது எம்.பி.க்களாக உள்ள ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரின் பதவிக்காலமும் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. வைத்திலிங்கத்திற்கு மாற்றாக தேர்ந்தெடுக்கப்படுகிற ராஜ்ய சபா எம்.பி.யின் பதவிக் காலமும் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.
சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது என்பதால், ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்று தெரிகிறது.
திமுகவில் 3 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு 300 பேர் போட்டியென்றால் என்ன செய்வது. போட்டி நிலவரம் எப்படி இருந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதுதான் முடிவு என்பதால், ராஜ்ய சபா எம்.பி. பதவியைக் குறி வைத்து பார்த்திருக்கும் திமுக தலைவர்கள் அந்த கனி நம் மடியில் விழாதா என்று காத்திருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.