நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு வரை, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினுடைய மகன் உதயநிதிதான் மேயர் வேட்பாளராக இருப்பார் என்று அரசியல் களத்தில் பேசப்பட்டது. மு.க.ஸ்டாலினைப் போலவே உதயநிதியும் சென்னை மேயராகி தனது அரசியல் இன்னிங்ஸை விளையாடுவார் என்று பேசப்பட்டது. அதனால், திமுகவில் மேயர் பதவிக்கு யாரும் முயற்சி செய்யாமல் இருந்தார்கள். ஆனால், உதயநிதி மேயர் பதவியெல்லாம் வேண்டாம் என்று நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவியை நோக்கி தனது தொகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தினமும் தனது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தொகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த, சூழலில்தான், சென்னையில் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பலரும் மேயர் பதவிக்கு குறி வைத்து உதயநிதியிடம் காய் நகர்த்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா முதல் ஆட்சிக் காலம் (1991 -1996) முடிந்த பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடத்தப்பட்ட 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தடையாக இருந்த சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான ரோஸ்டர் முறையை நீக்க அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். ரோஸ்டர் முறைப்படி அந்த முறை பட்டியல் இனத்தவர் ஒருவர் மேயராகி இருக்க வேண்டும். அதனால், சட்டத் திருத்தத்தின் மூலம், ரோஸ்டர் முறை கைவிடப்பட்டு இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று மேயரானார். இந்த நிகழ்வைக் கூறி இன்றைக்கும் பல தலித் இயக்கங்கள் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் மேயர் பதவி வகித்த பிறகு, அந்த பதவி மீதான ஆர்வம் அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்தது. அவருக்கு பிறகு, திமுகவில் மா.சுப்பிரமணியன், அதிமுகவில் சைதை துரைசாமி உள்ளிட்டோர் மேயர் பதவி வகித்துள்ளனர்.
அண்மையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், செப்டம்பர் 15 தேதிக்குள் தமிழ்நாட்டில் புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதில் தலைநகர் சென்னை மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்பதுதான் இப்போது திமுகவில் டாக் ஆக இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் திமுக வெற்றி பெற்ற நிலையில், திமுகவில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு குறி வைக்கும் பலரும் தற்போது உதயநிதியை மொய்த்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு யார் யார் முயற்சி செய்கிறார்கள். யாருக்கு வாய்ப்பு உள்ளது என்று திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரன், மறைந்த ஜே.அன்பழகனின் மகன் ராஜா
இதில், தற்போது திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள சிற்றரசுவுக்கு திமுகவில் சென்னை மேயர் வேட்பாளருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, திமுகவில் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டார். உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சிற்றரசுவின் மேற்கு மாவட்ட எல்லைக்குள்தான் உள்ளது. அதனால், உதயநிதி தொகுதிக்கு சென்றால் பெரும்பாலும் சிற்றரசுவின் மாவட்ட அலுவலகத்தில்தான் இருக்கிறாராம். உதயநிதியின் அப்பாயின்மெண்ட்களை பெரும்பாலும் சிற்றரசுதான் கவனித்து வருகிறாராம். உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் சிற்றரசுதான் ஒருங்கிணைக்கிறாராம். அதனால், உதயநிதியின் எல்லா நிகழ்ச்சிகளையும் சிற்றரசுதான் ஏற்பாடு செய்கிறாராம். உதயநிதிக்கு நெருக்கமாக இருப்பதால் சிற்றரசுவுக்குதான் திமுகவில் சென்னை மேயர் வேட்பாளருக்கு வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், திமுகவைச் சேர்ந்த கே.கே.நகர் தனசேகரனும் சென்னை மேயர் பதவிக்கு முயற்சி செய்து வருகிறாராம். ஏற்கெனவே சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் மேயர் பதவி கேட்டு உதயநிதியை அனுகி வருகிறார் என்றும் மற்றொரு வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் மட்டுமல்லாமல், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனும் சென்னை மேயர் பதவிக்கு முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, சிற்றரசுவுக்கு மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், ராஜா அன்பழகனை திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தனது மகனுக்கு சென்னை மேயர் பதவியைக் கேட்டு அணுகிவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பலரும் உதயநிதியை மொய்த்து வந்தாலும் சிற்றரசுவுக்கே வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் தான் இறுதி முடிவு தெரியவரும் என்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“