மத்தியக் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, படிப்படியாக கிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பரவலாக மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் சில பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக் கூடும் என்று கூறப்பட்டிருந்தது.
முக்கியமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டத்தின் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது தவிர திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், நாளையும் (மே 26) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக் கூடும்.
நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நாளை திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தை பொறுத்த வரை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களுக்கு வரும் 29-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும். இந்த தகவல்கள் அனைத்தும் வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.