தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடதமிழகத்தில் 15, 16 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவை நோக்கி நகருவதாகவும் 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு லட்சத்தீவை நோக்கி மீனவர்கள் செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், மாலத்தீவுக்கு வடகிழக்கே 290 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், இன்று முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகத்தில் மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரிக்கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.