சென்னை தரமணி டி.எல்.எஃப் வளாகத்தில் இரும்பு போர்டுகள் விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார். சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ரேணுகா(30). அங்கு குடும்பத்துடன் வசித்து வந்த ரேணுகா 100 அடி சாலையில் உள்ள டி.எல்.எப் பில்டிங்கில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று இரவு வேலை முடித்துவிட்டு ரேணுகா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். தரமணி டி.எல்.எப் வளாகத்திற்குள் நடந்து சென்றபோது பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்தநிலையில் தரையில் நிற்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இரும்பு டி.எல்.எப் போர்டுகள் அவர் மீது சரிந்து விழுந்தது.
இதில், படுகாயம் அடைந்த ரேணுகா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“