தமிழகத்தை மிரட்டும் வடகிழக்கு பருவமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து மழை பெய்து வருதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain, chennai float again in floods, school colleges leave announced districts, மீண்டும் வெள்ளத்தில் மிதந்த சென்னை, 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவாரூர், thiruvarur, thiruvallur, chenani, chengalpattu, kanchipuram, villupuram, thuthukudi, thirunelveli, kanyakumari

வடகிழக்கு பருவ மழை காரணமாக தலைநகரம் சென்னையில் பல பகுதிகள் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. சென்னை மட்டுமில்லாமல் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் கடந்த வாரம் சென்னையில் வேளச்சேரி, பெரம்பூர், கொளத்தூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. சென்னையில் பல சுரங்கபாதைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது.

வெள்ள நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பலரும் வெள்ளம் நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர்.

இருப்பினும், வங்கக் கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகரம் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்து வெள்ளத்தில் மிதக்கிறது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்த வாரங்களில் சென்னை இரண்டாவது முறையாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

சென்னையில் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மேற்கு மாம்பலம் மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேற்கு மாம்பலத்தில் சுமார் 20 தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

அதே போல, சென்னையில் பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வியாசார்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

போரூரில் சிக்னல், போரூர் காய் கறி மார்க்கெட் பகுதியில் சாலைகள் வெள்ள நீர் நிறைந்து இருந்தது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

அதே போல, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர், பானு நகர், புதூர், முனுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது.

சென்னை மட்டுமில்லாமல், புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, கூடுவாஞ்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. ஆவடி பகுதியில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் அப்பகுதி வெள்ளம் சூழ்ந்து இருந்தது.

மழை வெள்ள பாதிப்பு உள்ள மிகுந்து காணப்பட்ட திருவேற்காடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதியில், மழை வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிட்ட பிறகு பத்மாவதி நகருக்கு சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து விவரித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஆவடியில், ஸ்ரீராம் நகர், திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதையடுத்து, பூந்தமல்லி அம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கு சென்று அங்கே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள நீரில் நடந்து ஆய்வு செய்தார்.

வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாக மழை நீரை அகற்ற முதலமைசர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணவும் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளும் சாலைகளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை, பெரம்பலூரில் 1 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் இன்று விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Heavy rain chennai float again in floods school colleges leave announced districts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com