சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு மேல், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதன்படி, மும்பையில் இருந்து 145 பயணிகளுடன், சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கவுகாத்தியிலிருந்து, 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்கள் விமானம், பெங்களூரில் இருந்து125 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 5 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து நீண்ட நேரத்திற்கு பின்பு தரையிறங்கின
இதேபோல மும்பையில் இருந்து, சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர்இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதைப்போல் டெல்லி, மும்பை, கொச்சி கோவை, தோகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. திடீர் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
அதேபோல தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஏப். 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை மேடவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவானது. வளசரவாக்கம், நெற்குன்றம், சாலிகிராமம் ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்தில் 7 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. திடீர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டது.