தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், புதுப்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, புகார் தெரிவிக்க சென்னை பெருநகர மாநகராட்சி அவசர உதவி எண் அறிவித்துள்ளது. புதுப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறினாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது என புகார் தெரிவித்தனர்.
பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என சென்னையில் 15 மண்டலங்களின் 200 வார்டுகளில், மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், கனமழை காரணமாக சென்னை புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலனியைச் சேர்ந்த சாந்தி(46) என்பவர் வீட்டில் இருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றிரவு வியாசர்பாடி பகுதியில் தேவராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் மழை நீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிழந்தார். சென்னையில் மழை காரணமாக இருவேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“