மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும்.

சென்னையில் மழை :   மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை:

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த சில நாட்களாக சென்னையில் மாலை நேரங்களில் அவ்வப்போது  பெய்து வந்த மழை, நேற்று (10.8.18) இரவு தொடங்கி காலை வரை கொட்டி தீர்த்தது.

இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாம்பரம், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம், கிண்டி, தியாகராய நகர், அசோக்நகர், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், ஆவடி, குமணன்சாவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, உள்பட பல்வேறு இடங்களிலும்  பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம்   வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குமரி,நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை வீசும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close