/indian-express-tamil/media/media_files/1-rain-in-covai.jpg)
கோவையில் தொடர் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக நகரில் உள்ள ரயில்வே மேம்பாலங்களின் கீழ் மழைநீர் தேங்கியது.
கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 13) மாலை சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் தொடர் மழை பெய்தது.
கோவை டவுன்ஹால், காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக நகரில் உள்ள ரயில்வே மேம்பாலங்களின் கீழ் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கிய மழை நீரில், காந்திபுரம் வழியாக உக்கடம் முதல் பிரஸ்காலனி வரை செல்லும் தனியார் பேருந்து பயணிகளுடன் சிக்கிக்கொண்டது.
இதனை அடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் எந்த உயிர் சேதமும் இன்றி மீட்கப்பட்டனர். தீயணைப்பு துறையினரால் பேருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநகர பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்த நிலையில், ஏற்கனவே சிதிலமடைந்த வீடுகளில் குடியிருக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறும், வெள்ள நீர் உட்புகுந்த வீடுகள் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறும் அவர்களுக்கு உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருமாறும், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் கால அவசர உதவிகளுக்கு கோவை மாவட்ட மக்கள் 1077 அல்லது 0422-2301114 ஆகிய அவசர தொடர்பு எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.