சிவகங்கை மாவட்டம், காரைக்குடியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கண்ணன் பஜார். இங்கு சிறு சிறு துணிக்கடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள், ரெடிமேட் ஆடையகம் என 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் நெருக்கமான பகுதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஐந்து விளக்கு பகுதியில் இருந்து செல்லும் வரத்து கால்வாய் கண்ணன் பஜார் பகுதியில் முறையாக தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் மழை பெய்தால் கடைகளுக்கு மழை நீர் கடைகளுக்குள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இன்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் இரு சக்கர வாகனங்களும் மழை நீரில் மூழ்கின.
மேலும், செக்காலை ரோட்டில் இருந்து ஐந்து விளக்கு, கண்ணன் பஜார், டெலிபோன் எக்ச்சேஞ்ச், கல்லுகட்டி வழியாக கொப்புடை அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கும், அங்கிருந்து மடை வழியாக காரைக்குடி நாட்டார் கண்மாய்க்கும் மழைநீர் செல்கிறது.
ஆனால் கண்ணன் பஜார், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் ஆக்கிரமிப்புகளாலும், கால்வாய் நீண்ட காலம் தூர்வாரப்படாதாலும் தாழ்வான பகுதி என்பதால் கண்ணன் பஜாரில் அமைந்துள்ள கடைகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், அதிகமான ரெடிமேட் துணிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருந்த நிலையில், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து கடைகளுக்குள் புகுந்ததால் ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மேலும், மழைநீர் முறையாகச் செல்ல கால்வாய்களை தூர்வாரி இது போன்ற அசம்பாவிதத்தை காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“