சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணிக்கு மேல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழை விடியற்காலை 2 மணி வரை நீடித்தது. இரவு பெய்த கனமழையால் ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் மிதமாக தணிந்துள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே, சென்னை வானிலை மையம் முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், ``வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தமிழக மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சென்னையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை தாண்டி பலத்த காற்றுடன் இரவு விடிய விடிய மழை பெய்தது. மழை பொழிவு அதிகம் இல்லை என்றாலும் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது.