வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக மாஞ்சோலை பகுதியில் 40 செ.மீக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. மேலும் கனமழை பெய்து வருவதால் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் திருநெல்வேலி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். “தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கிடும் எச்சரிக்கைகளை ஏற்று நடந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திடவும் வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து மாத்திரைகள், இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனித்து செயல்படவும், தாழ்வான பகுதிகள் இருப்பவர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் முகாம்களுக்கு சென்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.