கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று (ஜுன் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வால்பாறையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று (ஜுன் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
மேலும், கன்னியாகுமரி, திருப்பூர் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“