சென்னை பெருவெள்ளம் மக்களை வாட்டி வதைத்த நிலையில், தற்போதைய தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், நாகர்கோவில் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பெருவெள்ளம் ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி தண்ணீரில் மிதக்கிறது. இதனால் சாலை மற்றும் ரயில் வழித்தடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி விரைவு ரயிலில் வந்த பயணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தென் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரினால் பல இடங்களில் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், விருதுநகரில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதைகள் சிலவற்றிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி தென் மாவட்டங்களுக்கு வரும் ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை - கன்னியாகுமரி, சென்னை - திருநெல்வேலி செல்லும் விரைவு ரயில்கள் இரண்டும் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள், ரயில் நிலைய பயணிகள் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார்.
மேலும், ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உணவு மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
செய்தி:க.சண்முகவடிவேல்
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“