பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கே சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் அமைந்துள்ளது ஆழியார் கவியருவி. சுற்றுலா தளமான கவி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், நேற்று (17.12.2023) இரவு முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கருமேகம் சூழ வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா பகுதிகளில் வால்பாறை வெளிநாட்டவர் மட்டும் வெளிமாநிலத்தவர்களை கவரும் பகுதியாக உள்ளது,கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தினால் இருந்த வால்பாறை தற்போது தொடர் மழையினால் குளிர் பிரதேசமாக மாறிவிட்டது.
வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர் கல் பகுதியில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர்.
மலைப்பாதையில் செல்லும்போது மரங்கள் காய்ந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தொடர் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் மலைப்பாதையில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“