தமிழ்நாட்டில் மார்ச் 11-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தாழ்வானபகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தி உள்ளார்.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளியண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக புதன்கிழமை (11.03.2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதன்கிழமை (11.03.2025) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தாழ்வானபகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட கலெக்டர் இளம் பகவத் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் நாளை (11.03.2025) மற்றும் நாளை மறுநாள் (12.03.2025) மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
இதே போல, கனமழை எச்சரிக்கை காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி மாவட்ட பொதுமக்களுக்கும் மிக கனமழையை முன்னிட்டு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மார்ச் 11-ந் தேதி மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மிக கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
மிக கனமழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் தொலைபேசி எண்:0462-2501070 ஆகியவற்றை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மிக கனமழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் மழை பெய்யும் போது பழைய, சேதமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ செல்ல வேண்டாம் என்றும் தண்ணீர் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.