தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் 3.1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இதனிடையே, தென் மாவட்டங்களில் நவம்பர் 25ம் தேதி மதியம் கனமழை பெய்தது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவானது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“