ஃபீஞ்சல் புயலின் தாக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 50 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கி, அன்று இரவு 12 மணியளவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது மட்டுமின்றி கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 49.29 செ.மீ மழை பதிவானது.
மேலும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் புயல் தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "மேற்கு வடமேற்கு வழித்தடத்தில் ஃபீஞ்சல் புயல் பயணிக்க போகிறது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு சென்று மழையை ஏற்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழையின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். வரலாறு காணாத வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நிகழ்வு கிருஷ்ணகிரியில் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக் கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளது. ஊத்தங்கரை அருகேயுள்ள சேலம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“