கோடை வெயிலின் தாக்கம் தற்போது தமிழ்நாடு முழுவதும் அதன் தீவிரத் தன்மையை வெளிப்படுத்த தொடங்கி விட்டது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி வருகிறது.
இந்த சூழலில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (மார்ச் 30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். இதன் தொடர்ச்சியாக மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இது தவிர ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
மேலும், ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.