தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் நெல் பயிர், வெற்றிலை சாகுபடி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, தலையாமங்கலம், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பல பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. வயல்களில் எங்கும் சூந்துள்ள மழை நீரால் வயல் கடல் போல் காட்சியளிக்கின்றன. வயல் ஓரங்களில் வடிகால்கள் முறையாக தூர் வாராததால் தண்ணீர் வடிய வழியின்றி வயல்களில் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல் சுமார் 1000 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அம்மாப்பேட்டையில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிப்படைந்தனர்.
இதே போல் ஒரத்தநாடு பகுதியில் தலையாமங்கலம், குலமங்கலம், நெய்வாசல், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிகின்ற வடிகால்கள் முறையாகத் தூர் வாராததால் மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு இதுவே காரணம். மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைப் பயிரான வெற்றிலை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வெற்றிலைகள் அழுகிவிட்டன. இதையறிந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குச் சுமார் 800 விசைப்படகுகள், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடி தொழில் செய்கின்றனர். மழை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. படகுகளைக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மொத்தத்தில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலாக வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.