கோவையில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் சுமார் 10 மணியளவில் கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ரயில் நிலையம், செல்வபுரம், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கணுவாய், தடாகம், துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதுமட்டுமின்றி மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளுக்குள்ளும், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் சிவவிஷ்ணு கோவில் அருகே உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் வீட்டில் வசிப்போர் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் காரணமாக அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியது.
கோவையில் மாநகரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“