மயிலாடுதுறை மாவட்டம் அருகே கரையேறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
Advertisment
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கரையை நேற்று நெருங்கியது. நேற்று இரவு அல்லது இன்று அதிகாலைக்குள் அது கரையைக் கடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தின் தெற்கு மற்றும் நாகை மாவட்டத்தின் மையப் பகுதியில் அது கரையைக் கடக்கத் தொடங்கியது.
ஆனால் அங்கேயே நிலைபெற்று வெகு நேரம் நிலைத்திருந்ததால் அந்த நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக காற்றுடன் கனமழை பொழிந்தது. இந்த நிலை இரவு 12.30 மணி வரை தொடர்ந்தது.
இடைவிடாமல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக காற்று இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றுடன் பெய்த அதிக கனமழையால் சாலைகள் எங்கும் நீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
காற்று பலமாக வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது
சீர்காழி அருகே உப்பனாறு ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளையும், பல்லாயிரக்கணக்கான விலை நிலங்களையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்
நேற்றைய கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், குத்தாலம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வயல்வெளிகள் பெரும்பாலானவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அதிக கனமழையின் விளைவாக வரலாறு காணாத அளவாக தமிழகத்தில் மிக அதிகபட்ச மழையாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43.62 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதையடுத்து அருகில் உள்ள கொள்ளிடத்தில் 31.58 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோயில் 24.24 செ.மீ, மயிலாடுதுறை 16.04 செ.மீ, மணல்மேடு 15.10 செ.மீ, பொறையார் 18. 30 செ.மீ என்று மாவட்டம் முழுவதுமே மிக கனமழை பதிவாகியது.
அருகிலுள்ள காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கடலூர், புதுச்சேரி மாவட்டங்களிலும் அதிக கனமழை பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிக கனமழையை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்காததால் இன்று காலை வரை மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் எதுவும் துவங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்துகள் தடைபட்டுள்ளன.
எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்பு பணிகளையும் மற்றும் நிவாரணப் பணிகளையும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“