தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகாலை முதலே ஆயிரம் விளக்கு, ராயபுரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, செண்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், தேனி மாவட்ட த்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.23) விடுமுறை விடப்பட்டுள்ளது
அதேபோல் கோவையில் தொடர்மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும்,
அதே நேரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“