Advertisment

கனமழையால் தமிழகத்தில் இதுவரை 12 பேர் மரணம்: பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை

தமிழகத்தில் கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Disaster management on 12 people lost lives in recent heavy rain TN Tamil News

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறந்துள்ளன. 24 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இவ்வாண்டு 1.3.2024 முதல் 20.5.2024 முடிய 9.63 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 விழுக்காடு குறைவாகும்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 42 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மிக கனமழை என்பது 11.56 செ.மீ முதல் 20.44 செ.மீ வரை பதிவாகும்.

கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கடலூரில் இடிமின்னல் தாக்கியதில் ஒருவரும் கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கனமழையின் (Rain In Tamilnadu) காரணமாக 16.05.2024 முதல் 20.05.2024 முடிய மொத்தம் 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 24 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 நிவாரண முகாம்களில் மொத்தம் 68 இருந்த நிலையில் அனைவரும் இன்று விடு திரும்பினார்கள். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 நிவாரண முகாம்களில் இருந்த 77 பேரும் இன்று வீடு திரும்பினார். கரூரில் 4 நிவாரண முகாம்களில் 324 பேர் உள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலமாமக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 20.05.2024 நாளிட்ட அறிவிக்கையில் 24.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

21.05.2024 அன்று கனமழை முதல் மிக கனமழை தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

22.05.2024 அன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். 23.05.2024 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 24.05.2024 அன்று நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடற்கரை, குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 23.5.2024க்குள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் 18.05.2024, 19.05.2024 மற்றும் 20.05.2024 ஆகிய நாட்களில் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு 24.05.2024 முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள், கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment