சிதம்பரம், சீர்காழியில் வெளுத்து வாங்கிய மழை: தண்ணீரில் மூழ்கிய வயல்வெளிகள்

சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Heavy rains over Chidambaram, Sirkazhi: Waterlogged in paddy fields Tamil News
Chidambaram, Sirkazhi area paddy fields Waterlogged due to Heavy rain Tamil News

க.சண்முகவடிவேல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த அக்டோர்பர் 28-ம் தேதி தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும், இந்தாண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால், தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களில் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர்நிலை நிறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுமார் 20 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஓரிரு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

சிதம்பரத்தில் அண்ணாமலை நகர், சிவபுரி, வேலக்குடி, வெல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, சாமியார் பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை, பிச்சாவரம், பி.முட்லூர், பெரியப்பட்டு, எ.மண்டபம், கரிகுப்பம், அன்னங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழையானது சுமார் ஒன்றரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதனால் சிதம்பரம் நகர் முழுவதும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சிதம்பரம் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழும் அபாயம் உள்ளது.

அதேபோல் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூறையில், கனமழையின் காரணமாக பம்பு செட்டு போல் தண்ணீர் பீய்த்து அடித்தது. இதனால் ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் அமர முடியாமல் ஒதுங்கி நின்றனர். மேலும் தொடர் மழை காலம் என்பதால், உடனடியாக சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூறையை சீரமைக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

மழை நீருடன் கழிவுநீரும் கலந்திருப்பதால், சாலையோர குடியிருப்புகளில் வாகனம் செல்லும் பொழுது, தேங்கியுள்ள மழை நீர் வீடுகளுக்கு செல்கிறது. இதனால் வீடுகளில் உள்ள நீரினை குடியிருப்பு வாசிகள் வெளியேற்றி வருகின்றனர். மழைநீருடன் கழிவு நீர் கலந்திருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டத்திலேயே அதிகப்படியாக 19 செ.மீ மழை சீர்காழியில் பதிவாகியுள்ளது.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கனூர் சாலையில் இரவு பெய்த கனமழையின் காரணமாக, சாலை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால், இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

கொள்ளிடத்தில் 162 மி.மீ, தரங்கம்பாடியில் 89 மி.மீ,மணல்மேட்டில் 82 மி.மீ, மயிலாடுதுறையில் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, நேற்று பரவலாக கனமழை பெய்தது. இந்த கன மழை காரணமாக, மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சீர்காழி அருகே தென்பாதி பகுதியில் ரவி என்பவரின் வீட்டில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பூம்புகார் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில், நள்ளிரவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பின்னர், நேற்று காலை வடிகால் சீரமைக்கப்பட்டதால், தண்ணீர் வடியத் தொடங்கியது. செம்பனார் கோவில் காவல் நிலைய வளாகத்திலிருந்த பழமையான மரம் வேருடன் சாய்ந்தது.

சீர்காழி அருகேயுள்ள மண்ணியாறு, மணிக்கரணையாறுகளின் கரைகளைத் தாண்டி தண்ணீர் வழிந்தோடி பூம்புகார், பெருந்தோட்டம், அகரப் பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், நாயக்கர்குப்பம், திருவாலி, மணல்மேடு, நிம்மேலி, புதுத்துறை, குரவலூர், நெப்பத்தூர், திருநகரி, மங்கைமடம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படாததே தண்ணீர் வடியாமல் இருப்பதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீர்காழி நகரப் பகுதியில் வசந்தம் நகர், பாலசுப்ரமணியன் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட புங்கனூர் சாலையை மூழ்கடித்து மழைநீர் ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பூம்புகார் மீனவர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் உள்ளே சென்றது. இதனால் வீட்டில் வைத்திருந்த அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள், கட்டில், பாத்திரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக, மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

வடிகால் வசதி முறையாக இல்லாததால் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டு, அப்பகுதியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டில் தண்ணீர் சென்றதால் அங்கு வசிக்கக்கூடிய மக்கள் குடிநீர் ,உணவு இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு பெரும் சிரமத்திற்கு ஆளாக வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வடிகால்களை தூர்வாரி, வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Heavy rains over chidambaram sirkazhi waterlogged in paddy fields tamil news

Exit mobile version